ரூ.500 கோடி மதிப்பில் புதிய திரைப்பட நகரம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று (06) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த ‘கலைஞர் 100’ விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவராஜ்குமார், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கவுதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ரோகினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர்பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆந்திர அமைச்சர் ரோஜாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பிரபலங்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சியில் பேசினர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில்,
அப்பா, அம்மா வைத்த பெயரை மறந்துவிடும் அளவிற்கு தமிழ்நாடு கலைஞர் என்றுதான் உச்சரித்து இருக்கிறது. தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.
தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டத்தோடு, மக்கள் கொடுத்த கலைஞர் பட்டத்துக்கும் பொருத்தமானவர் அவர்.வாழ்ந்த காலத்தைப் போலவே மறைந்த பின்னரும் நினைக்கக்கூடிய பெருமை மிக்கவர் அவர்தான்.
2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைவால் தமிழகமே கலங்கிப் போனது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறையினர் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தி பெருமை சேர்த்தார்கள். ஆனால் அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
எழுத்து, பேச்சால் ரசிகர்களின் உள்ளத்தில் கொடி ஏறியவர் கருணாநிதி. அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினால் என்றால் அந்த படம் வெற்றி என்றே கருதப்படும். அவரது வசனத்தைக்கூறி நடிப்பு துறையினர் வாய்ப்பு கேட்கும் சூழல் ஏற்பட்டது.
ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை அவரது சினிமா பயணம் மிகப் பெரியது. கலை இனிமே என்னிடம் என்று வாழ்ந்த தலைவர் அவர். தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன அந்த வகையில் தற்போதைய தி.மு.க. ஆட்சியும் தொடர்கிறது.
இந்த விழா மேடையிலேயே புதிய திட்டங்களை நான் அறிவிக்கிறேன். எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி ரூ.5 கோடி செலவில் 4 படப்பிடிப்பு தளத்துடன் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில், பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நவீன திரைப்பட நகரில் வி.எப்.எஸ், அனிமேஷன், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் என சகல வசதிகளும் அமைக்கப்பட இருக்கிறது. முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.