“பாஜகவின் வஞ்சகங்களுக்கு தக்க பதிலடி தரவேண்டும்” – மல்லிகார்ஜுன கார்கே
10 ஆண்டு கால தோல்விகளை மறைப்பதற்காக பாஜக உணர்வுபூர்வமான விஷயங்களை தூண்டிவிடுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பது, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு மற்றும் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை குறித்து விவாதிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தங்களது பத்தாண்டு கால தோல்விகளை மறைக்க பாஜக உணர்வுபூர்வமான விஷயங்களை முன்வைக்கிறது. வேண்டுமென்றே அனைத்து விஷயங்களிலும் காங்கிரஸை இழுக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அடிமட்ட பிரச்சினைகளில் பாஜகவின் பொய்கள், வஞ்சகங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், அவற்றை மக்கள் முன் எடுத்து வைக்கவும் வேண்டும்” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரைக்காக பாராட்டு தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, அடுத்து மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரையிலான பாரத் நியாய யாத்திரை சமூக நீதி பிரச்சினையை தேசிய அளவில் மையப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.