காசாவில் வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி!
காசாவின் கான் யூனிஸிஸ் நகரில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நேற்று ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri), லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளால் கொல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு ஏவுகணையும் 100 கிலோகிராம் எடை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
தற்போது, காசாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் உஷார்படுத்தப்பட்டன. காசாவைச் சேர்ந்த அதிகப்படியான பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் இஸ்ரேலிய சிறையில் உள்ளனர். அவர்களின் பெயர்களையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், காசாவின் கான் யூனிஸ் அருகே உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் போரால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து தெற்கு காசாவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 22,313 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 57,296 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.