பெங்களூருவில் ரூ.1600 கோடி செலவில் கட்டப்பட்ட போயிங் தொழில்நுட்ப மையம் – பிரதமர் திறந்து வைத்தார்!
பெங்களூருவை அடுத்துள்ள தேவனஹள்ளியில் போயிங் நிறுவனம் ரூ. 1600 கோடி செலவில் 43 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளாகத்தை கட்டியுள்ளது. இதனைதிறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று பெங்களூரு வந்தார்.அவரை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா ஆகியோர் வரவேற்றனர்.
போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: போயிங் நிறுவனம் அமெரிக்காவுக்கு வெளியே அமைத்துள்ள மிகப்பெரிய அதிநவீன தொழில்நுட்ப மையத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன்மூலம் இந்தியாவில் அரசு மற்றும்தனியார் துறையில் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாகும். விமானப்போக்குவரத்து துறையில் பணியாற்ற 6 ஆயிரம் பொறியாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
விமானப் போக்குவரத்து துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறைக்கு இந்தியா உலகத்துக்கு வழிகாட்டும் வகையில் வளர்ந்துள்ளது. உலகின் 3-வது பெரிய விமானபோக்குவரத்து துறை சார்ந்தசந்தையை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய விமானப் போக்குவரத்து துறையில் பெண்கள் சம அளவில் பங்கு வகிக்கின்றனர்.
அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவே சுகன்யா திட்டம் உருவாக்கப்பட்டு, 150 இடங்களில் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் விமானியாக பயிற்சி பெறும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தியாவில் மனித வளம் நிறைந்திருக்கிறது. புதுமையை விரும்பும் நிலையான ஆட்சி இருக்கிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யும் மேக் இன் இந்தியா திட்டத்தால் உலகின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா வேகமாக முன்னேறி உலகளாவிய சந்தைக்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
நகைச்சுவையாக பேசிய பிரதமர் மோடி: பெங்களூருவில் போயிங் நிறுவன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேடையில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் ‘மோடி..மோடி..”என முழக்கம் எழுப்பினர். இதனால் பேச்சை நிறுத்திய மோடி, சித்தராமையாவை நோக்கி ‘‘பாருங்கள் முதல்வரே மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்”என சிரித்தவாறு கூறினார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிரித்ததால் சித்தராமையா தர்மசங்கடமாக காணப்பட்டார்.