இலங்கை – பாகிஸ்தான் நான்காவது பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பு!
இலங்கை-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நான்காவது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று (03) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இலங்கை குழுவிற்கு தலைமை தாங்கினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் ஹமூத் உஸ் ஜமான் கான் அந்த நாட்டின் உயர்மட்ட குழுவிற்கு தலைமை தாங்கினார்.
இதன்போது கடந்த வருட பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்தது.
அத்துடன், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பயிற்சி பரிமாற்ற திட்டங்களை அதிகரிப்பது, இருதரப்பு பாதுகாப்பு பயிற்சிகள், பரஸ்பர பாதுகாப்பு கரிசனைகள், கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் ராணுவ தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்வது குறித்தும் இரண்டு தரப்பும் ஆலோசனை நடத்தின.
பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.