கொரோனா எதிரொலி : நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்வு!

கொரோனா எதிரொலி : நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்வு!

நாடு முழுவதும் இதுவரை 196 பேரிடம் ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் புதிதாக ஒடிசாவும் இணைந்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸின் துணைதிரிபான ஜேஎன்.1 வகை கொரோனாதொற்று, நம் நாட்டில் முதன்முதலாக கேரளாவில் கண்டறியப்பட்டது. தற்போது 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 196 பேரிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) புள்ளிவிவரப்படி கேரளா (83), கோவா (51), குஜராத் (34), கர்நாடகா (8), மகாராஷ்டிரா (7), ராஜஸ்தான் (5), தமிழ்நாடு (4), தெலங்கானா (2), ஒடிசா (1), டெல்லி (1) ஆகியவை ஜேஎன்1 வகை கரோனாபட்டியலில் உள்ளன. இப்பட்டியலில் ஒடிசா புதிதாக இணைந்துள்ளது.

இன்சாகாக் புள்ளிவிவரப்படி நவம்பரில் 17 பேரிடமும் டிசம்பரில் 179 பேரிடமும் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வகை வைரஸ் தொற்றை மிக வேகமாகப் பரவும் தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நம் நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் வேளையில், ஜேஎன்.1 வகை தொற்று குறித்து மாநிலங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,394 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் இருவர், தமிழ்நாட்டில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி வரை தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் குறைந்திருந்தது. ஆனால் கொரோனா புதிய திரிபு மற்றும் குளிர்காலம் வந்த பிறகு தினசரி புதிய நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கிய கொரோனா தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது தினசரி பாதிப்பு லட்சங்களில் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 5.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம்1.19 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This