புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்

புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்

தமிழ் மக்களுக்கும் இந்த நாட்டில் சம உரிமையுள்ளது. உத்தேச புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சமவுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.இந்த அரசை வீழ்த்துவதோ அல்லது பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல . சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறு நாடு முழுவதும் மக்கள் ஆணை கிடைத்ததோ அதேபோன்று வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. அத்துடன் அநுர சுனாமியை எமது மட்டக்களப்பு மாவட்டம் மடடமே தைரியமாக எதிர்த்து நின்றது. அதனால்தான் அங்கு நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. ஆகவே அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

எனினும் இப்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பயன்படுத்தப்படுகின்றது எனவே அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதேவேளை காணாமல் போனோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தக் குற்றத்தை செய்தோர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் அரசு வகைப்பொறுப்புக்கூற வேண்டும் என்பதுடன் அரசின் நிலைப்பாட்டையும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல் மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் போன்றவற்றால் சிங்கள மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லை .ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களை சேர்ந்த தமிழ் மக்களும் இவற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ் மக்களின் காணிப்பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் இந்த அரசு மூடப்பட்டிருந்த சில வீதிகளை திறந்துள்ளது அதனை வரவேற்கின்றோம். இன்னும் முன்னேற்றகரமான் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மாகாணசபைகள் என்பது முக்கியமானது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகசந்திப்பில் தெளிவு படுத்தியுள்ளதால் அது தொடர்பில் நான் மேலும் பிரஸ்தாபிக்கவில்லை.

ஆனால் இந்த அரசு உருவாக்கவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும் சம உரிமையுள்ளது எனவே அந்த சம உரிமைகள் புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் எம்மிடம் தகவல்கள் உள்ளன. குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பிள்ளையான் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் எதனையும் காணமுடியவில்லை. இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட நாம் பல தகவல்களை முன்வைத்துள்ளோம். பிள்ளையான் செய்த விடயங்கள் தொடர்பிலும் நாம் கூறினோம். முன்னைய அரசுகள் எதனையும் செய்யவில்லை.

அத்துடன் மதுபானசாலை அனுமதிகள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. வடக்கு அரசியல்வாதிகளும் பெற்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. அந்த அனுமதிகளை பெற்றவர்களின் பட்டியலை ஏன் இதுவரை அரசாங்கம் வெளியிடவில்லை. அவ்வாறானவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசை வீழ்த்துவதோ எதிர்ப்பதோ எமது நோக்கம் அல்ல. அரசின் முற்போக்கான நடவடிக்களுக்காகக் காத்திருக்கின்றோம் .சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

CATEGORIES
Share This