கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய வேண்டும்
தற்போது எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்ற புலனாய்வுத்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் மொழிவர்மன் தம்பி முத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துடன் மேலும் கூறுகையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணியானது மாபெரும் மக்கள் இயக்கமாக தந்தை செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த 2001 ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாம் 15 ஆசனங்களை பெற்றோம்.
தற்போது எமது கட்சிக்குள் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளது இன்று நமது கட்சிக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் பல வழக்குகள் உள்ளன.கடந்த பல வருடங்களாக தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிக்குள் இருந்து செயற்பட்டவர்கள் இன்று பல பிரிவுகளாக பிரிந்து செயற்பட்டு வருகின்றனர். தமது உறுப்புரிமை நிராகரிக்கப்பட்டதாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தற்போது எமது கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன, தற்போதைய தலைவரான எனக்கு ஒரு பொறுப்பிருக்கின்றது எமது கட்சிக்குள் இருக்கின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டி உள்ளது. நான் இதற்காக ஒரு குழுவை நியமித்துள்ளேன்.
கட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக குற்ற புலனாய்வுத்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இவற்றை நான் உடனடியாக அமுல்படுத்த உள்ளேன். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்பாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது என்றார்.