மாவீரர்களை நினைவேந்த தமிழருக்கு உரிமை உண்டு; அமைச்சர் வசந்த சமரசிங்க சாட்டையடி
“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.”- இவ்வாறு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் மீண்டும் பிரிவினைவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க வேண்டிய தேவை வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்குக் கிடையாது. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்துள்ளார்கள்.
இந்த அரசில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதான பங்காளிகளாக உள்ளனர். அனைத்து இன மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம்.
வடக்கு, கிழக்கில் மாவீரர் தினத்தைத் தமிழ் மக்கள் அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இனவாதத்தை முன்னிலைப்படுத்தி தெற்கில் அரசியல் செய்யும் தரப்பினர் வீணாக அச்சமடையத் தேவையில்லை.” – என்றார்.