ஜே.வி.பி எதிர்த்தது போல் நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்

ஜே.வி.பி எதிர்த்தது போல் நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தின் ஜனரஞ்சக வேலைத் திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று அங்கு இடம்பெற்ற வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளை மட்டுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்த அடிப்படையில் அரசாங்கத்தில் உள்பிரச்சினைகள் ஏற்படும் போது புதிய அமைச்சுப் பதவிகளை உருவாக்காமல் அதே நிலைமைகளை கடைப்பிடித்தால் நல்லது.

எதிர்க்கட்சியில் இணைந்து செயல்பட கூடியவர்கள் உள்ளனர். இதற்கு முன்னர் எமது குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித, அனுராதா, சாமர போன்றவர்கள் பாராளுமன்ற ஆணைகளை பெற்றுள்ளனர்.

அப்போது அரசாங்கம் செய்த அனைத்தையும் ஜே.வி.பி எதிர்த்தது.

ஆனால், நாங்கள் அப்படி எதிர்ப்பது போல் நடந்து கொள்ளவில்லை. மக்கள் அங்கும் இங்கும் தாவித் தாவி மாறி மாறி வாக்களித்த முறை மாறி இம்முறை வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே எம்மை விட்டுப் பிரிந்து பாராளுமன்ற ஆணையைப் பெற்றவர்களை மீண்டும் எம்முடன் இணைத்துக் கொள்வதற்கு நாங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. இணைந்து செயல்பட அது ஒரு தடையல்ல என்றும் வலியுறுத்தினார்

கடந்த காலங்களில் கட்சி சில பின்னடைவை சந்தித்தது. மற்றும் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலான அரசியல் சூழலை சரியாக கண்காணித்து கட்சியில் தேவையான மாற்றங்கள் ஏற்படும்.

பொதுத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களின் குறைந்த வாக்குகள் மூலம் தவறவிட்டோம். மகிந்த ராஜபக்ச ஒரு தொழில்முறை அரசியல்வாதி. அப்படிப்பட்டவர் அரசியலை விட்டு விலக முடியாது. சந்திரிகா, ரணில், மைத்திரி கூட அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது இனவாதமற்ற தேசியவாதக் கட்சியாகும் எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This