பிரபாகரன் கட்டளையிட முன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தது

பிரபாகரன் கட்டளையிட முன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தது

மது, புகைத்தலுக்கு எதிராக தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்தார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமத்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் பரந்தன் நகரில் இடம்பெற்றது. 

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமாக நடைபெற்றது.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிளிநொச்சியில் 16 மதுபானசாலைகள் திறப்பதற்கு காரணம் யார்? இதனை மக்கள் அறிய வேண்டும்.

இவ்வாறு அடுத்தடுத்து மதுபானசாலைகள் திறக்கும் போது ஏன் போராட்டம் நடைபெறவில்லை. ஏன் மெளனமாக இருக்கிறார்கள்?

மதுபானசாலைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினோம். தடுத்தோம். ஏன் இங்கு தடுக்க முடியாது போனது?

கிளிநொச்சியில் முழங்காவிலில் பகுதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட முயற்சித்தபோது மக்கள்  என்னிடம் வந்தார்கள். அதற்கு எதிராக வழக்கு போட்டு மூடினோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறு மக்களின் ஒத்துழைப்புடன் மூடினோம். மன்னாரில் திறக்கப்பட்ட மதுபானசாலை மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. ஆனால் கிளிநொச்சியில் எதிர்க்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன?

யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டில் மதுபானசாலைக்கு எதிராக வழக்கு செய்கிறோம். மக்கள் என்னிடம் வந்தால் அத்தனை மதுபான சாலைகளையும் மூடுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என இன்று வாக்குறுதி தருகிறேன்.

இளம் தலைமுறைகளை மதுவுக்கு அடிமையாக்குவதற்கு மதுபானசாலைகள் திறக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புகள் இல்லாமையால் இளைஞர்கள் தவறான பாதைக்குள் செல்ல முனைவார்கள்.

மக்கள் இணைந்தால் நாங்கள் வழக்குகள் மூலம் மூடுவிப்போம். யாருடைய சிபாரிசில் மதுபானசாலைகள் கொண்டுவரப்பட்டது என்று கேளுங்கள்.

தலைவர் பிரபாகரன் கட்டளையிடமுன்னர் தமிழரசு கட்சியினர் மது, புகைத்தலுக்கு எதிராக தீர்மானம் எடுத்தார்கள். 

மது, புகை பாவிக்கக் கூடாது என்று இளைய சமுதாயத்தை பாதுகாக்க பிரபாகரன் கட்டளையிட்டார். அதனால் இளம் தலைமுறையினர் பாதுகாக்கப்பட்டனர்.

அதற்கு முன்னர் இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் மது, புகைத்தல் பயன்படுத்தக்கூடாது என்று சமூக கோட்பாடுகளுடன் உருவாக்கினர். அதனால் கட்சி சமூக கோட்பாடுகளுடன் இயங்கியது.

அவ்வாறு தமிழரசுக் கட்சி சமூகத்துடன் இணைந்துள்ளது. இந்த நிலையில்தான் மதுபானசாலைகளை மூட வேண்டும் என நாங்கள் முயற்சிக்கிறோம். இதற்காக நான் தொர்ந்தும் நீதிமன்றம் ஏறுகிறேன்.

கிளிநொச்சி பரந்தனில் உள்ள Top மதுபானசாலையை மூடுவோம். அத்துடன் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஏனைய மதுபானசாலைகளையும் மக்களின் ஒத்துழைப்புடன் மூடுவோம்.

எமது கட்சியிலும் தூய்மைப்படுத்தல் அரசியலை முன்னெடுக்கிறோம். முல்லைத்தீவில் மது அனுமதி கொடுத்தவர் தானாக விலகினார். அவ்வாறு மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிச்சயமாக போதைக்கு எதிரான தமிழரசுக் கட்சியின் சமூக கோட்பாடுகள் பாதுகாக்கும் வகையில் கட்சியில் தூய்மைப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவோம் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

CATEGORIES
Share This