பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தில்: தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிகட்டத்தில்: தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுமையாக பூர்த்தியாகியுள்ளதுடன், இறுதிகட்ட பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

தபால் மூலமான வாக்களிப்பு இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வருவதாகவும் ஆணைக்குழு கூறியது.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை (நவம்பர் 14ஆம் திகதி) இடம்பெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு இறுதிகட்ட பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளும் நிறைவடைய உள்ளன.

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகிய தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் முதலாம், 4ஆம் திகதிகளிலும் வாக்களிப்பு இடம்பெற்றது. இந்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நேற்று 7ஆம் திகதியும் இன்று 8ஆம் திகதியும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இம்முறை 7 இலட்சத்து 38 ஆயிரத்து 50 பேர் (738,050) தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே அளவான அரச ஊழியர்கள் தபால்மூலம் வாக்களித்திருந்தனர்.

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதுடன், பொதுத் தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது. அடுத்தவார ஆரம்பத்தில் வாக்குப் பெட்டிகள் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதுடன், அங்கிருந்து தேர்தலுக்கு முதல்நாள் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லப்பட உள்ளன.

வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியது.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை பொலிஸார் அமுல்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக 1000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பெஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

CATEGORIES
Share This