“48 மணித்தியாலம்“ – மாற போகும் அரசியல் களம்: தயாரான ரணில், சஜித், அனுர
ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் இன்னும் 48 மணிநேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான நீதிமன்றத் தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளதால் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்காக பல தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த நான்கு வாரங்களில் இரண்டு மனுக்கல் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் குறித்த மனுதாரர்களின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்துவிட்டது.
இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தவாரம் முழுவதும் பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தமக்கு ஆதரவான தரப்பினருடன் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை ரணில் விக்ரமசிங்க நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசியலில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்க வாரங்களாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.