சூடுபிடிக்காத பொதுத் தேர்தல்: தொன்னூறு வீதமான வேட்பாளர்கள்பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை
பொதுத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வாரம் மாத்திரமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் குறைவாக உள்ளதுடன், ஏழாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
”பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 1,000 இற்கும் குறைவானவர்களே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனையவர்களின் பிரச்சாரம் மற்றும் அரசியல் ஈடுபாடுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த போக்குக்கு பிரதான காரணம் மக்களுக்கு அரசியலில் ஈடுபாடின்மை மற்றும் பாரம்பரிய கட்சி கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவாகும்.
வாக்காளர்களை அணுக கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் நாடு முழுவதும் தொழில்நுட்ப ரீதியாக 600,000 பிராந்திய கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்ட போதிலும் தற்போது 9,291 பிராந்திய கட்சி அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
கடந்த காலத்தில் பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பொதுச் சொத்துகளை பயன்படுத்தல் காணப்பட்ட போதிலும் தற்போது அந்தச் செயல்பாடு குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை 25 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவை கடுமையான வன்முறை சூழ்நிலையை தோற்றுவிக்கவில்லை.
அரசியல் கட்சிகளின் பல பிராந்திய பிரதிநிதிகள் செயலற்ற நிலையில் இருப்பதால் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கவில்லை. அரசியல் விசுவாசத்துடன் செயல்பட்டவர்கள் தற்போது குறைந்துள்ளனர். அதனால் இந்த நிலையை ஏற்பட்டுள்ளது.” என்றார்.
பொதுத் தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலில் 1000 இற்கும் குறைவானர்களே பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மூலம் 90 வீதமான வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் நாட்டம் காட்டவில்லை.
பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான நிலையால் அவர்கள் பாரிய பிரச்சார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.