மலையகத் தமிழ் சமூகத்திற்கு தேசிய இனமாக அங்கீகாரம்!; 11 கோரிக்கைகளும் முன்வைப்பு
இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்நாட்டில் வாழும் மலையகத் தமிழர்களை தனி தேசிய இனமாக அங்கீகரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஒரு வருடத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட நடைபயணத்தின் பத்துக்கும் மேற்பட்ட ஆரம்பக் கோரிக்கைகளில் இரண்டிற்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக தமிழ் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது தொடர்பாக, தாம் விடுத்த கோரிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக மண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவின் ஏற்பாட்டாளர் அந்தனி ஜேசுதாசன் தெரிவிக்கின்றார்.
“மாண்புமிகு மலையகம் நடை பயணத்தில் நாம் 11 கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அவற்றில் மூன்று கோரிக்கைகளில் இரண்டு நிறைவேறியுள்ளதாக குறிப்பிட முடியும். மலையக மக்களை தேசிய இனமாக ஏற்றுக்கொண்டு மலையகத் தமிழர்கள் / மக்கள் என பொதுவான எல்லா இடங்களிலும் குறிப்பிட வேண்டுமென்ற கோரிக்கை விடுத்திருந்தோம், இது வெற்றியளித்துள்ளது.
சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிட வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென கோரியிருந்தோம். ஆகவே, இந்தியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் எனக் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.”
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தில் மாபெரும் சக்தியாக விளங்கும் மலையகம் வாழ் தமிழ் மக்களை, இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி 2023ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை பதினைந்து நாட்கள் நடைபயணம் இடம்பெற்றதின், ஓராண்டு நிறைவை முன்னிட்டு 2024ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் பங்கேற்ற நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தனி ஜேசுதாசன், “மலையக மக்களுக்கு முகவரி வழங்குவது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தனித்துவமானது,” எனக் குறிப்பிட்டார்.
“மலையக மக்களுக்கு தனித்தனி வீட்டு முகவரியை வழங்குவது குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பும் இதில் குறிப்பிடத்தக்க விடயம். மலையக மக்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் சாதகமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.”
2024 பெப்ரவரி 15ஆம் திகதி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு 338 தனிநபர்கள் மற்றும் 60 அமைப்புகளின் பெயர்களுடன் “மலையக மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல் தொடர்பாக” என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், அரசாங்க நியமனங்கள் மற்றும் அமைச்சரவை முடிவுகளில் கூட மலையகத் தமிழர் என்ற அடையாளம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இத்தகைய பின்னணியில், இலங்கையில் அவர்களுக்கென ஒரு தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், P8 இனம் தொடர்பான பகுதியில் “மலையகத் தமிழர்கள்” என அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு கீழ் காணப்படும் வகையில் நாங்களும் எங்கள் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம்.” என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஆவணங்களைத் தயாரிப்பதில், மலையகத் தமிழ் மக்களை, இந்தியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் என குறிப்பிட மக்கள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஒப்புக்கொண்டதாக மண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவின் ஏற்பாட்டாளர் அந்தனி ஜேசுதாசன் தெரிவிக்கின்றார்.
15 நாட்கள் நடைபயணம்
28 ஜூலை 2023 தலைமன்னாரில் விசேட ஆரம்ப நிகழ்வை நடத்திய மலையகத் தமிழர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தரப்பினர், இலங்கையின் சுதந்திரமான மற்றும் சமமான குடிமக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 11 கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 29ஆம் திகதி காலை தலைமன்னாரில் இருந்து சுமார் 300 கிலோமீற்றர் தூர நடைபயணத்தை மேற்கொண்டு 12 ஓகஸ்ட் 2023 அன்று மாத்தளையில் அதனை நிறைவு செய்தனர்.
இந்த நடைபபயணம், 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்களின் முன்னோர்கள் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு வந்து பின்னர், பல சிரமங்களுக்கு மத்தியில் நடை பயணமாகவே மாத்தளையை வந்தடைந்த அதே பாதையை தெரிவு செய்து, அதற்கு “வேர்களை மீட்டு உரிமை வென்றிட” என பெயரிட்டது.
இந்த நடைபயணத்தின் நோக்கம், மலையகத் தமிழ் சமூகத்தின் வரலாறு, போராட்டங்கள், சாதனைகள், அவர்களின் பங்களிப்பு, தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் அபிலாஷைகள் பற்றிய அடிப்படை புரிதலை சிங்கள, இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் பிற சகோதர மக்களிடையே ஏற்படுத்துவதாகும்.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய “மாண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவு” இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
இலங்கையில் மிகப் பெரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்கள் மன்னார் மற்றும் மாத்தளை என்பது குறிப்பிடத்தக்கது.
11 கோரிக்கைகள்
1.வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அங்கீகரித்தல்
2.ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக்
கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகாரம்
3.தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக இச் சமூகத்தை இலக்கு
வைத்து விசேட செயற்பாடுகளை செயற்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை
4.வாழ்விற்கான ஓர் ஊதியம், கண்ணியமான வேலை, சட்டப்பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும்
பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.
5.தொழிலாளர்களிலிருந்து சிறு நில உடமையாளர்களாக மாறும் பொருட்டு வீடமைப்பு
மற்றும் வாழ்வாதாரங்களுக்கான பாதுகாப்பான உரிமைக்காலத்துடனான காணி உரிமை
6.தமிழ் மொழிக்கு சமமான பயன்பாடு மற்றும் சம அந்தஸ்து
7.அரசாங்க சேவைககளை சமமான அணுகல்
8.பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம்
செய்தல்
9.வீட்டுப் பணியாளர்களின் முழுமையான பாதுகாப்பு
10.மலையகக் கலாசாரத்தை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல்
11.அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஆளுகையில் ஓர் அர்த்தமுள்ள வகிபங்கை
வழங்கும் ஒப்புரவான மற்றும் உள்ளடங்கலான தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு