சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணைய சமஷ்டியை ஏற்பதாக நாம் கூறவில்லை

சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணைய சமஷ்டியை ஏற்பதாக நாம் கூறவில்லை

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் இதற்காக சமஷ்டி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் உதயகம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாகவும், சுமந்திரன் தரப்பினர் அரசாங்கத்தில் இணைவதற்காக சமஷ்டி அரசியலமைப்பை செயற்படுத்தல் மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை செயற்படுத்தல் தொடர்பான நிபந்தனைகள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வேலையில்லாமையினால் எதனையாவது கூறிக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சியிலென்றால் அவருக்கு எந்த பதவிகளும் வழங்கப்படவில்லை. எமது கட்சியில் யார் வெளிவிவகார அமைச்சர் என்றெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. அதனை நாங்கள் தீர்மானித்துக்கொள்கின்றோம். ஆனால் அவர் கூறுவதை போன்று எதுவும் கிடையாது. அவை முற்றிலும் பொய்யாகும். அப்படி அவர் தொடர்ந்து கூறும் போது அவரே நையாண்டிக்கு உள்ளாக நேரிடும். அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

இதேவேளை என்னை விவாதத்திற்கு வருமாறு அவர் சவால் விடுப்பது தொடர்பில் பதிலளிப்பது எனது காலத்தை வீணடிக்கும் செயலாகும். அவர் தன்னை சிங்கம் என்றும் கூறியுள்ளார். அவர் சிங்கமா? இல்லையா? என்று மக்களுக்கு தெரியும் என்றார்.

CATEGORIES
Share This