தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?

தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா?

தேசிய மக்கள் சக்தியின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வளமான நாடு- அழகான வாழ்வு எனும் மகுட வாக்கியத்தோடு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அவர்களின் மகுடவாக்கியத்திற்குள் தமிழர்கள் உள்ளடக்கப்படுவார்களா? ஏனெனில் வட கிழக்கு தமிழர் தாயக மக்களுக்கு அது பாரம்பரிய மரபுரிமை சார்ந்ததும் அடையாளம் மற்றும் தேசியம் சார்ந்துமான அரசியலாகும்.

மாற்றத்தை உருவாக்குவோம் எனக் கூறும் தேசிய மக்கள் சக்தி அத்தகைய அரசியலை தமிழ் மக்களுக்கு உரித்தாகுவதற்கான எத்தகைய சமிக்ஞையையும் காட்டாத நிலையில், அவர்களிடம் இருந்தும் போலி தமிழர் தேசியம் பேசும் தமிழ் வேட்பாளர்களிடமிருந்தும் தமிழர் தாயக அரசியலை காக்க அரசியல் துணிச்சல் மிக்கவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் கொண்டவர்களுக்கும், தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை இல்லை என்று கூறும் தேசிய மக்கள் சக்திக்குள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் வளமான நாடு- அழகான வாழ்வு என்பது பொருளாதாரம் சார்ந்ததும் ஊழல் அற்றதுமான அரசியல் கலாச்சார சூழ்நிலையாகும்.

முழு நாட்டிலும் தேசிய சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ,நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள், ஊழலில் ஈடுபட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தோர் அனைவரும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை அளிப்பதோடு அவர்களின் குடியியல் உரிமையும் பறிக்கவும் வேண்டும் என்பதில் வடக்கு தெற்கு என்று எவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

அதேபோன்று வடக்கு கிழக்கில் யுத்த காலத்திலும் ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்னரும் அமைச்சர் பதவிகளை பாவித்தும், நிர்வாக அதிகாரத்தை உபயோகித்தும் அதிகார துஷ்பிரயோகம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் அபிவிருத்தியும் தடுத்தது மட்டுமல்ல வாழ்வை தேடி அலைவோரின் வாழ்வை காணாமலாக்கியோரும் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் வளமான நாடு- அழகான வாழ்வு என்பது தமிழர்களுக்கு அரசியல் சார்ந்தது.சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் வலிந்து தினித்த 30 வருட யுத்த காலத்தில் அவர்களின் இறுக்கமான பொருளாதார கட்டுப்பாடுகள் பொருட்களின் தடைகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் தங்கள் தேசத்தின் வளத்தையும் அழகான வாழ்வையும் அனுபவித்தார்கள்.

அத்தகைய வளமான அழகான வாழ்வை நோக்கிய கனவிலே ஐம்பது ஆயிரத்துக்கு அதிகமான போராளிகள் களப்பலியாகி உள்ளனர். லட்சங்களை தாண்டிய பொதுமக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்தும் இன அழிப்புக்கு முகம் கொடுத்தும் அரசியல் கொள்கையில் மாறாது பயணித்துக் கொண்டிருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் பின்புலமாக செயல்படும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் செயற்குழு உறுப்பினர்கள் 13 ம் திருத்தமும் அதிகாரப் பகிர்வும் தமிழர்களுக்கு தேவையில்லை எனக்கூறுவதும், மகாணசபை தேர்தல் நடத்துவோம் என்று கூறுவதும் அரசியல் கபட நாடகமே. என்றார்.

CATEGORIES
Share This