ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் கண்டனம்!
நினைவுகூரல் உரிமையை மறுதலித்து 3 பெண்கள் உட்பட 4 தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது.ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றதுநினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் மிகுந்த வேதனையை ஒட்டுமொத்த தமிழ் மக்களிற்கும் ஏற்படுத்தி உள்ளது.
சொல்லணாத்துயர் வலி சுமந்த இந்த நாட்களில் தங்கள் உறவுகளை நினைந்து பிரார்த்திப்பதற்கு அந்த நாட்களில் அவர்கள் பட்ட துயரத்தை கஞ்சி பருகி உயிரை பிடித்திருந்த அவலத்தை நீள நினைந்து தாமும் கஞ்சி காய்ச்சி குடிப்பதும் பரிமாறுவதும் குற்றமாக அரச இயந்திரத்தால் பார்க்கப்படுவது இலங்கையில் 15 ஆண்டுகளாகியும் பேரினவாத மனநிலையில் மாற்றம் வராத கொடூர முகத்தின் வெளிப்பாடாகும். இது தொடர்ந்தும் இனங்களிற்கு இடையேயான நல்லெண்ணத்தை ஆழமாக பாதிக்கும் செயற்பாடாகும்.புனிதமான கோவிலில் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சிய பெண் பிள்ளைகள் உள்ளிட்டோரை அஜாரகமாக கைது செய்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது.
இந்த விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்து பாரிய எதிர்ப்பை வெளிக்காட்டி அரசின் கோர முகத்தை துகிலுரித்து அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.தமிழ் தேசியம் பரப்பில் வாழும் மூத்ததலைவர் திருகோணமலையை தற்போதும் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.இரா. சம்பந்தன் அவர்களுடைய மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதும் பிணை கூட வழங்கப்படாமல் பெண்பிள்ளைகள் உள்ளிட்டோர் விளக்கமறியலில் இரு வாரம் வைக்கப்பட்டிருப்பதும் மனதை வருத்துகின்றது.
உடனடியாக அனைத்து தமிழ்தேசிய சக்திகளும் இவர்களின் விடுதலைக்கு சகல எத்தனங்களை செய்ய வேண்டுவதுடன் அனைத்து முற்போக்கு மற்றும் உலகளாவிய சக்திகளதும் கவனத்தை ஈர்த்து அரசிற்கு அழுத்தத்தை பிரயோகித்து நினைவுகூரலுக்கான உரிமையை உறுதிப்படுத்துமாறும் வலிசுமந்த இந்த நாட்களில் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.