வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள்; மாணவர்கள் சிரமம்

வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள்; மாணவர்கள் சிரமம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஆதரவாக சக ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

பாடசாலை நேரங்களிலும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் ஆசிரியர்கள், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை நேரடியாகவே பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அதிபர்களின் ஆதரவை கோரி அண்மையில் விசேட கூட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஒரு ஆசிரியரும், ஐக்கி மக்கள் சக்தி சார்பாக ஒரு ஆசிரியரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஆதரவு வழங்கும் முகமாகவே மேற்படி ஆசிரியர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிகளவில் ஆசிரியர்கள் ஆதரவை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியுடன், ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம்,பெற்றோர் கோரிக்கை விடுத்தும் இந்த செயற்பாடு தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆகவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மாத்திரமன்றி வலய கல்வி பணிமனையும் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

CATEGORIES
Share This