அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிற்கு வாக்களிக்க வேண்டும்- தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வலியுறுத்து..!

அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிற்கு வாக்களிக்க வேண்டும்- தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வலியுறுத்து..!

அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை மீட்க உதவுங்கள் என தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

வவுனியாவில் இன்றையதினம்(23) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸிக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என நம்புகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும்.

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.

வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் பல வருடங்களாக அயராது விடை தேடி வரும் இந்த தாய்மார்கள், ஹரீஸ் இலகுவில் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

அமெரிக்கத் தேர்தல் நாளான நவம்பர் 5, 2024 செவ்வாய் அன்று கமலா ஹரிசுக்கு ஆதரவாக வாக்களிக்க, அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை, தாய்மார்களாகிய நாங்கள், எமது காணாமலாக்கப்பட்ட குழந்தைகளின் பெயரால் வேண்டி கொள்கிறோம்.

நீதி மற்றும் இறையாண்மைக்கான தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாற்றுப் பின்னணியில், நாம் கமலா ஹரிஸிற்கான ஆதரவு தெரிவிக்கிறோம்.

இங்கே வலுவான பெண் தலைவர்கள் நின்ற வரலாறு: முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி: தமிழ் இளைஞர்கள் இறையாண்மையுள்ள தமிழ் தேசத்தை அடைவதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தார் மற்றும் முக்கிய உதவிகளையும் செய்தார்.

செயலாளர் ஹிலாரி கிளிண்டன்: சுதந்திரம் மற்றும் நீதிக்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழர் ஆயுதப் போராட்டத்தின் நியாயத் தன்மையை அவர் ஒப்புக்கொண்டார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: இறையாண்மை மீதான தமிழர் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார், இலங்கை ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைவராக இருந்த மிசெல் பாச்சிலெ, இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தார்.

லூயிஸ் ஆர்பர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் என்ற முறையில், தமிழ்ப் பொதுமக்களுக்கு நீதி கோரி, போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மற்றொரு ஐ.நா மனித உரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை, போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் மற்றும் தமிழர் உரிமைகளுக்கு ஆதரவாக ஐ.நா தீர்மானங்களை முன்வைத்தார்.

தமிழ் மக்கள், குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸிடம் நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வலிமை, இரக்கம் மற்றும் உறுதிப்பாடு இருப்பதாக நம்புகிறார்கள்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், தமிழர்களின் படுகொலைகள் தொடர அனுமதித்த உலகளாவிய செயலற்ற தன்மை குறித்து அவர் வருத்தப்படுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தமிழ் மக்களைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்படவர்களுக்கான நீதியை உறுதிப்படுத்தவும், தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்கவும் நிரந்தரத் தீர்வை வழங்கக்கூடிய தலைவராக ஹரீஸ் காணப்படுகின்றார் என தெரிவித்தனர்.

CATEGORIES
Share This