சரியான நேரத்தில் கிடைத்த நிதியுதவி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நன்றி கூறினார் ஜனாதிபதி ரணில்
புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இது பெரும் பலமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“நாட்டிற்கு அந்நியச் செலாவணி, ஈட்டித்தந்துவிட்டு நாடு திரும்புபவர்களுக்கு புதிய வாழ்க்கையைத் தொடங்க அரசாங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இது பரிசு அல்லது அன்பளிப்பு அல்ல. நீங்கள் செய்த சேவைக்கு நீங்கள் பெற்ற உரிமை என்றுதான் கூற வேண்டும். வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பின்னர் பழைய தொழில்களில் ஈடபட சிலர் விரும்புவதில்லை.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, நீங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்தீர்கள்.
அவ்வாறு நிதி கிடைக்கவில்லை என்றால் நமது பொருளாதாரம் மீண்டு வராது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் நான் நாட்டைக் பொறுப்பேற்றேன்.
எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, எதிர்காலம் இல்லாத நாட்டை நான் ஏற்க வேண்டியதாயிற்று.
நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும்போது, முதல் சில மாதங்களில் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் பணத்தை அனுப்பவில்லை என்றால், எங்களால் நிலைமையை சமாளிக்க முடியாமல் இருந்திருக்கும்.
உங்களது பங்களிப்பின் காரணமாக கடந்த சிங்கள புத்தாண்டு, வெசாக், பொசன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட எம்மால் முடிந்தது.
இந்த நிலையில் இருந்து முன்னேறி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். எப்பொழுதும் கடன் பெற்று பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது.
இதுவரை நாம் பெற்ற வெளிநாட்டு கடனைத் திருப்பி செலுத்தும் வகையில் சலுகைகளைப் பெற்றுள்ளோம். ஆனால் கடனை திருப்பிச் செலுத்துவதால் மாத்திரம் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.
நமது அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். தேவையான அளவு அந்நியச் செலாவணி கிடைக்கும் வரை கடன் பெறவேண்டியுள்ளது. நாம் கடன் பெறும்போது, நம் கடன் அதிகரிக்கிறது.
எனவே, அந்நியச் செலாவணி அளவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நாடாக நாம் அச்சமின்றி முன்னேற வேண்டும். பாரிய அளவிலான நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் அதிகம் வருகிறார்கள். இது ஒரு நல்ல நிலைமையாகும்.
அதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.