இலங்கையிலும் அமெரிக்காவிலும் ஒரே தினத்தில் தேர்தல்: தோல்வியை சந்திக்கப்போகும் இரண்டு ஜனாதிபதிகள்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும்.
ஏற்கனவே, பிரதானக் கட்சிகள் அனைத்தும் பிரசார நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்திலிருந்து பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாக அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி அல்லது நவம்பர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
என்றாலும், சில அமைச்சர்களும் அரசாங்கத்தின் சில முக்கிய தலைவர்களும் நவம்பர் 05ஆம் திகதிதான் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு தேர்தல் நவம்பர் 05இல் நடைபெற்றால் அமெரிக்காவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.
நவம்பர் 05ஆம் திகதிதான் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு இடையே இம்முறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் ஜனாதிபதி ஜோ பைடனைவிட டொனால்ட் ட்ரம்புக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது.
அதேபோன்று இலங்கையிலும் கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு மிகவும் குறைவாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முதல் இடத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலேயே இருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் இலங்கையின் ஜனாதிபதிகள் நடைபெற போகும் தேர்தலில் தோல்வியை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.