சஜித் பிரேமதாச கட்சிக்குள் மூளும் சர்ச்சை!; சரியான பொறிமுறை இல்லை என குற்றச்சாட்டு

சஜித் பிரேமதாச கட்சிக்குள் மூளும் சர்ச்சை!; சரியான பொறிமுறை இல்லை என குற்றச்சாட்டு

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் எழுந்துள்ள உள்ளக அரசியல் சர்ச்சை மேலும் அதிகரிக்கும் விதத்தில் மற்றுமொரு முன்னாள் அமைப்பாளர் ஒருவர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைப்பாளர் சாகர சேனாரத்ன இவ்வாறு கட்சியை விட்டு விலகி சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் இணைந்து கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைப்பாளர் சாகர சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக எதிர்ப்பையும் மீறி கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கட்சியை விட்டு விலகி இந்த முறை பொதுத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் ஆளுமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், தமது கட்சியின் தலைவர்களுக்கு அவ்வாறான ஆளுமை இருந்திருந்தால், தமது கட்சிக்கு ஒருபோதும் இவ்வாறானதொரு தோல்வி ஏற்பட்டிருக்காது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் அமைப்பாளர் சாகர சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியில் புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்பவர்கள் புத்திசாலித்தனமான முட்டாள்களாக மாறிவிட்டதாகவும், இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கான ஆசனத்தைக் கூட தக்கவைக்க முடியவில்லை என்றும் சேனாரத்ன இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பல உள்ளக அரசியல் பிரச்சினைகளை வெளிப்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சரியான பொறிமுறை கூட அக்கட்சியிடம் இல்லை என அவர் இந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நெருங்கிய நண்பர், மனைவி மற்றும் சகோதரி ஆகியோரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் அவர் விமர்சித்துள்ளார்.

CATEGORIES
Share This