பிறிக்ஸ் மாநாடு “வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தால் அனுர, விஜித பங்கேற்கவில்லை”

பிறிக்ஸ் மாநாடு “வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தால் அனுர, விஜித பங்கேற்கவில்லை”

சீனா, ரசியா, இந்தியா ஆகிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் (BRICS) பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்காமல் இருப்பதற்கு வெளிநாட்டு சக்தியின் அழுத்தம் ஏதேனும் காரணமா என என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்ரமரத்ன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

“பிறிக்ஸ் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்திருப்பதைக் குறித்து மகிச்சியடைவதாக கூறிய அவர் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகிய இருவரும் மாநாட்டில் பங்கேற்காமலிருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவர்கள் முக்கியமான மாநாடுகளில் பங்கேற்பது அவசியம் என்றும் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கை இலங்கைக்கு இன்றியமையாதது என்றும் அவர் மேலும் கூறினார்.

ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான், தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்த கண்டங்களுக்கு இடையேயான ஓஐசியில் உறுப்பினர்களாக உள்ளதோடு, அதன் 16 ஆவது அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி ரஷ்யாவின் கசான் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் பிறிக்ஸ் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதி மட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பங்கேற்கவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

பிறிக்ஸ் உறுப்புரிமையைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் கடந்த முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது இலங்கை அரசாங்கம் அவரிடம் கோரியதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு இந்தியா உட்பட ஏனைய உறுப்பு நாடுகளிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தேர்தல் காலம் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அவர் இந்த வருட மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் அமைச்சர் கூறியிருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டுமென அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பிறிக்ஸில் இணைய வேண்டும் என்று இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This