லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; மேயர் உட்பட 27 பேர் பலி
லெபனான் மீது கடந்த ஒக்டோபரில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு மக்களில் 2,377 பேர் உயிரிழந்து உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் தெற்கு பகுதியை சேர்ந்த நகர மேயர் ஒருவரும் அடங்குவார். பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. அவற்றில் மேற்பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனினும், இஸ்ரேல் இராணுவம் கூறும்போது, தெற்கு பகுதி நகரான குவானாவில், ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஜலால் முஸ்தபா ஹரிரி என்பவரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 15 பேர் உயிரிழந்தனர் என தெரிவித்து உள்ளது.
இதற்கு முன் 1996ஆம் ஆண்டு குவானா நகரில், ஐ.நா. வளாகத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நூற்றுக்கணக்கானோர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் ஐ.நா. அமைதி காப்பாளர்கள் 4 பேரும் அடங்குவார்கள்.
தெற்கு லெபனான் மீது இஸ்ரேலின் 138 வான்வழி தாக்குதல்கள் பதிவாகி உள்ளன. இதேபோன்று, 6 நாள் போர் நிறுத்தத்திற்கு பின்னர், பெய்ரூட் நகரின் தெற்கே அமைந்த புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில், மேயர் அகமது கஹில் கொல்லப்பட்டு உள்ளார் என மாகாண ஆளுநர் ஹுவைடா துர்க் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதனால், கடந்த ஒக்டோபரில் இருந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு மக்களில் 2,377 பேர் உயிரிழந்து உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. இதுதவிர, 4 இலட்சம் குழந்தைகள் உள்பட 12 இலட்சம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர். நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக மேயர் வந்தபோது, தாக்குதலில் பலியாகி உள்ளார்.