தேசிய மக்கள் சக்தியின் எம்.பிகள் சம்பளத்தை எவ்வாறு பெறுவர்?; சுனில் ஹந்துன்நெத்தி விளக்கம்
புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. குறித்த உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கட்சியின் நிதியத்துக்கே வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் தெரிவித்தாவது,
”தமது கட்சி சலுகைகளுக்காக அரசியல் செய்யும் இயக்கம் அல்ல. ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படாது.
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் நிதியத்துக்கே தமது சம்பளத்தை வழங்குவர். நிதியத்தின் ஊடாகவே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.” என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அல்லது கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த எம்.பிகள், தமது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நேரடியாக கட்சியின் நிதியத்துக்கே வழங்கியிருந்தனர். கட்சியின் நிதியத்தின் ஊடாகவே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.