பொது தேர்தல்; பிளவுப்படும் தமிழ் கட்சிகள்

பொது தேர்தல்; பிளவுப்படும் தமிழ் கட்சிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பல அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ரெலோ மற்றும் புளொட் கட்சிகளும் இந்த முடிவை ஏற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.ஆரியேந்திரனின் வெற்றிக்காக இந்த அரசியல் கட்சிகள் செயற்பட்டிருந்தன.

அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.

அத்துடன், அரசியல் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி, பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியாகச் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் பா. அரியேந்திரனுக்கு ஆதரவளிப்பதை தவிர்த்திருந்த அந்த கட்சி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்திருந்தது.

இதன்படி, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் பரந்த கூட்டணியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This