பொதுத் தேர்தலிலும் நல்ல விடயங்களுக்கு அநுரவுக்கு ஆதரவு
பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமாக இருந்தால் அந்த அரசாங்கத்தின் முன்னேற்றகரமான விடயங்களுக்கு எமது ஆதரவு இருக்கும் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படுவீர்களா என்ற கேள்விக்கு தனது பேஸ்புக் பக்கத்தில் வீடீயோ பதிவொன்றை வெளியிட்டு சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
”தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பல மாற்றங்களை கிரமாக கொண்டு வருகின்றார். அந்த வகையில் பொதுத் தேர்தலுக்கு பின்னரும் அவர்களால் ஆட்சியமைக்கக்கூடுமாக இருந்தால் முன்னேற்றகரமான விடயங்களுக்கு எமது ஆதரவு இருக்கும். பல விடயங்களுக்கு நாங்களாகவே பாடுபட்டுள்ளோம். இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் கூட 2015 முதல் 2019 வரையிலான முயற்சியின் வரைபை தான் பூர்த்தி செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த விடயங்களிலும் மற்றும் ஊழலை ஒழித்தல் உள்ளிட்ட விடயங்களிலும் நாங்கள் அவர்களுடன் சேர்ந்து இணங்குவதற்கான சந்தர்ப்பம் நிச்சயமாக வாய்க்கும். நாங்கள் அதனை செய்ய வேண்டும் என்பதே எங்களின் சிந்தனையாகும்” என கூறியுள்ளார்.