“உயிருக்கு ஆபத்து… இது நல்லதல்ல”; ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

“உயிருக்கு ஆபத்து… இது நல்லதல்ல”; ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், அரங்கேறும் குளறுபடிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கிறது.

குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.

அதன்படி, கடந்த ஜூலை 13ஆம் திகதி பென்வில்வேனியாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின்போது மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த ட்ரம்பின் மீது துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி ரவை காதை உரசிச் செல்ல உயிர் தப்பினார் ட்ரம்ப்.

அதேபோல், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ட்ரம்ப் மீது ரயான் வெஸ்லி ரூத் என்ற 58 வயது நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆனால், இம் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதேபோல் அண்மையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் இத் தாக்குதல்களுக்கு யார் காரணம், வெளிநாட்டு சதி தான் காரணமா என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ‘ஈரானால் எனக்கு உயிராபத்து உள்ளது. ஏற்கனவே என்னைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அது தோல்வி கண்டது.

மறுபடியும் அவர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கக்கூடும். இது நல்லதல்ல. முன்பு இருந்ததை விட அதிக பாதுகாவலர்கள் என்னைச் சுற்றி இருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையில் மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும் அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This