ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள்: ஐ.நாவின் உதவியை கோரியுள்ள வடக்கு
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும், அந்தத் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெரிவிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வடக்கிலிருந்து பரந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீடு தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்த, வடமாகாண ஊடகவியலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் ஜூன் 18ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நேற்றைய தினம் (ஜுன் 19) நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட அதே தினத்தில், வடமாகாண ஊடகவியலாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்டது.
போராட்டத்தின் முடிவில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில், போராட்டத்தில் கலந்து கொண்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை பகிரங்கமாகக் கண்டித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்த கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளை ஆதரித்தல் மற்றும் எளிதாக்குவதோடு, பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதி செய்யுமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்புப் பொறிமுறையை நிறுவ வேண்டுமென்பதோடு, ஊடகவியலாளர்களுக்கு சட்ட உதவி, பாதுகாப்பான வீடுகள் மற்றும் அவசரகால பாதுக்காப்பு வசதிகள், ஜீ.பி.எஸ் வசதிகள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு வளங்களையும் ஆதரவையும் வழங்க வேண்டுமெனவும் அந்தக் கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.
“இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை தேவை“ என தலைப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதீபனின் வீட்டின் மீது ஜூன் 13 வியாழன் நள்ளிரவு 12.15 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் ஜூன் 18ஆம் திகதி கைது செய்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரும் ஜூன் 19ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனுக்கு நீதி கோரி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக “ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்பதை மறவாதே”, “எங்களுக்கு நீதி வேண்டும் உண்மை வேண்டும்”, “உண்மை ஒருபோதும் அழியாது” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“நசுக்காதே நசுக்காதே ஊடக சுதந்திரத்தை நசுக்காதே”, “ரணில் அரசே ரணில் அரசே ஊடக சுதந்திரம் எங்கே?”, “பிரதீபனின் வீட்டின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது இராணுவ புலனாய்வுத் துறையின் சதியா?” போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் தே.தேவானந்த், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான, எஸ். சுகிர்தன் மற்றும் பி. கஜதீபன், மார்க்சிஸ லெனினிஸக் கட்சியின் தலைவர் சி. கே. செந்திவேல், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், குரலற்றோருக்கான குரல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், திருநர்கள் சார்பில் ஏஞ்சல் குயின்டன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் “இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை தேவை“ என தலைப்பிடப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.