டெல்லி பயணமாகின்றார் ஜனாதிபதி அநுர; முதல் இராஜதந்திர சந்திப்பில் அழைப்பு

டெல்லி பயணமாகின்றார் ஜனாதிபதி அநுர; முதல் இராஜதந்திர சந்திப்பில் அழைப்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், பதவியேற்ற பின்னர் டெல்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க சுமார் 56 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

இந்த வெற்றியை தொடர்ந்து முதல் இராஜதந்திர சந்திப்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா புதிய ஜனாதிபதியாகத் தேர்வுசெய்யப்பட்ட அநுரகுமாரவை நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இதன்போது பதவியேற்ற பின்னர் டில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்திய விஜயம் அமையும் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை, புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

பிரதமர் பதவி விலகியதை தொடர்ந்து அமைச்சரவை தானாக கலைந்துவிடும்.

இந்நிலையில், சுமார் இரண்டு தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக பெண் ஒருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்க வாய்ப்புள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பிரதமராக பதவியேற்பார் எனவும், நான்கு பேர் இடைக்கால அமைச்சர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபடுகின்றது.

இவர்களுக்கு 15 அமைச்சுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் விரைவில் பொது தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This