அனுரவின் இனவாத கருத்தை மறுத்த சுமந்திரன்: இணைந்து செயற்படவும் தயார் என்கிறார்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லையென தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போது மாற்றம் தொடர்பிலும், தெற்கிலே மக்கள் மாற்றமொன்றை ஏற்படுத்தும் வேளையில் வடக்கு மக்கள் அதற்கு ஆதரவாக மற்றும் பங்காளிகளாக இல்லாமல் இருக்கிறார்கள் என்றொரு கருத்தை கூறியிருக்கிறார்.
இந்த கருத்து தொடர்பில் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் இவ்வாறானதொரு கருத்தை கூறியிருந்தார்.
அதாவது வடக்கு மக்கள் பங்குதாரர்களாக தன்னோடு இருந்திருக்கவில்லையென கவலைப்பட்டார். ஆனால் அவரை வெற்றிப்பெறச் செய்த மக்களே விரட்டியடித்தார்கள். அப்பொழுது தெரிந்திருக்கும் வடக்கு மக்களுடைய பார்வை சரியானதென்று.
தோழர் அனுரகுமார இந்த வார்த்தைகளை இனவாத உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் கூறியதாக நான் நினைக்கவில்லை. எனக்கும் அவரை நன்றாக தெரியும். அவர் அப்படிப்பட்ட ஒருவர் அல்ல.
உண்மையில், இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே, இந்த விடயத்தில் எங்களுக்கு வேறுபட்ட உணர்வுகள் இல்லை” என்றார்.
அதேவேளை, எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தனது கட்சி ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்திய சுமந்திரன் அனுரகுமார வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் அவர் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்களுக்காக அவருடன் இணைந்து செயற்பட தயார் என்றும் கூறினார்.