உக்ரெய்ன் நாட்டின் விமானப்படைத் தளபதி பதவி நீக்கம்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடி நடவடிக்கை
உக்ரெய்ன் நாட்டின் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலேஷ்சுக்கைஅந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவினால் நாட்டிற்கு வழங்கப்பட்ட F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாலும், அந்நாட்டின் முன்னணி விமானி ஒருவர் உயிரிழந்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரெய்னின் மிக மோசமான சமீபத்திய வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்த போது குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் “மூன்ஃபிஷ்” என்று அழைக்கப்படும் ஓலெஸ்கி மெஸ் என்ற விமானியால் இயக்கப்பட்டது.
F-16 போர் விமானங்களில் பறக்க பயிற்சி பெற்ற சில உக்ரேனிய விமானிகளில் ஒலெஸ்கியும் ஒருவர். எனவே, அவரது மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
இதேவேளை, உக்ரெய்ன் ரஷ்யா மீது இரவோடு இரவாக ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், இதனால் இரண்டு ரஷ்ய எரிசக்தி நிலையங்களில் தீ ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, 158க்கும் மேற்பட்ட உக்ரேனிய ட்ரோன்கள் தலைநகர் மொஸ்கோ உட்பட நாட்டின் 15 பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியது.
எனினும் தாக்குதலின் விளைவாக மொஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் “தனி தொழில்நுட்ப அறையில்” தீ விபத்து ஏற்பட்டது என்று நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.