மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகங்கள்: இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் தமது பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படும் நிலையில் இந்த அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையை கருத்திற்கொண்டு தமது பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும், அத்தியாவசிய விடயம் ஒன்றிற்கு தவிர பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
அவசர காலங்களில் தங்கள் பணியிடங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களை பயன்படுத்தவும், சில நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை சேமித்து வைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு சாத்தியமான சூழ்நிலையையும் சமாளிக்க இஸ்ரேல் அரசாங்கம் வைத்தியசாலைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் வாழும் தமது உறவினர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தூதுவர் இலங்கையில் உள்ள உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினுமு், இஸ்ரேலில் பணிபுரியும் நபர்களுடன் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.