சவாலான ஜனாதிபதித் தேர்தல்: ஆட்சி மாற்றத்தை உறுதியாக எதிர்பார்க்கும் எதிர்க்கட்சிகள்

சவாலான ஜனாதிபதித் தேர்தல்: ஆட்சி மாற்றத்தை உறுதியாக எதிர்பார்க்கும் எதிர்க்கட்சிகள்

இலங்கையின் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 80 வீத வாக்குகள் பதிவு செய்யப்படுமாயின், வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கு 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது போட்டி கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு முகங்கொடுக்க முடியாத சவாலாக இருக்குமெனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 17.1 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தல் பரவலாக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 80 வீத வாக்குகள் பதிவாகுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 80 வீதம் பேர் வாக்களிப்பார்களாயின், வெற்றிபெறும் வேட்பாளர் 7 மில்லியன் வாக்குகளைப் பெறவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குடன் 6,550,000 வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 6.55 மில்லியன் வாக்குகளை 22 தேர்தல் மாவட்டங்களால் பிரிக்கும் நிலையில், தேசிய மக்கள் சக்தி ஒரு மாவட்டத்தில் 318,000 வாக்குகளைப் பெற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி மற்றும் திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் 318,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கூட இல்லை. ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆரம்பத்திலேயே இதுவொரு தோல்வியாகுமென பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தேசிய மக்கள் சக்தி தேர்தல் வெற்றி தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் தலைமைத்துவ மாற்றத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி பதவிக்காலம் ஐந்து அல்லது ஆறு வருடமா என எந்தவொரு பிரஜையும் கேட்க விரும்பவில்லை எனவும், பதவியில் இருப்பவர்கள் மாத்திரமே அதனை அறிய விரும்பியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், நாட்டில் அதிகாரத்தை மாற்றுவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும் எனவும் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தலை நடத்தி இந்தத் தலைவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு தமது தரப்பும் நாட்டு மக்களும் விரும்புவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்தா வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தலை தாமதப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகத்தையும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This