ரஷ்ய கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (18) அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 51 கிமீ (32 மைல்) ஆழத்தில் பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்துடன் அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் அவசரகால அமைச்சகத்தின் கம்சட்கா கிளை, நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும், பல பின்அதிர்வுகள் பதிவாகியதாகவும் தெரிவித்தது.
இந்த வலுவான நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யாவில் உள்ள ஷிவேலுச் எரிமலை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1952 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 9 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.