பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது வெவ்வேறு நாடுகளில், 16 முதல் 18 வயது வரை வேறுபடுகிறது. ஆனால், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலைமையால், குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

பாகிஸ்தானில் 2022 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தால் பெய்த பருவமழையின் விளைவாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்த பல கிராமங்கள் பாதிக்கப்பட்டதுடன், விவசாயப் பகுதியில் அறுவடைப் பயிர்களும் அழிக்கப்பட்டன. இந்த வெள்ளத்தால், நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, நீரில் மூழ்கியது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான மக்களும் இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு வழியின்றி, பெறும் பணத்திற்கு ஈடாக, தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையினால், 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளே, அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

720 டாலருக்கு விற்கப்பட்டேன்

வெள்ளத்தின் அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்காக, ஷமிலா என்ற 14 வயது சிறுமியை, பெற்ற பணத்திற்கு ஈடாக, அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஷமிலாவின் மாமியார், ஷமிலாவுக்கு ஈடாக 720 அமெரிக்க டாலரை, ஷமிலாவின் பெற்றோருக்கு கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள், ஒரு நாளைக்கு ஒரு டாலரில் மட்டுமே குடும்ப வாழ்க்கையை ஓட்டுவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை, பெரியதாகவே தோன்றியது.

“நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இனியாவது, என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்” என்று கூறிய ஷமிலா, தனது இரு மடங்கு வயதுடைய ஒருவருடனான திருமணத்தைப் பற்றி தெரிவித்தார்.

14 வயதுக்கு சிறுமிக்கு 6 மாதக் குழந்தை
அதேபோல், நஜ்மா அலி என்ற 14 வயதுடைய சிறுமியும், 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு, மனைவியாகப் போகிறோம் என்ற உற்சாகத்தில் மூழ்கினார்.

“என் திருமணத்திற்காக, என் பெற்றோருக்கு 900 அமெரிக்க டாலரை, என் கணவர் கொடுத்தார். ஆனால், என் கணவர் கடன் வாங்கித் தான், என் பெற்றோருக்குக் கொடுத்துள்ளார்; அதனைத் திருப்பிச் செலுத்த, இப்போது வழி இல்லை.

உதட்டுச்சாயம், ஒப்பனைப் பொருள்கள், உடைகள், மரச்சாமான்களைப் பெறுவேன் என்று நினைத்தேன். இந்த நிலையில், எங்களிடம் சாப்பிடக்கூட எதுவும் இல்லாததால், என் கணவர் மற்றும் 6 மாதக் குழந்தையுடன் என் பெற்றோரிடமே திரும்பி வந்துவிட்டேன்’’ என்று கூறுகிறார்.

“நான் படிக்க விரும்புகிறேன் என்று என் தந்தையிடம் கூறியுள்ளேன். என்னைச் சுற்றியுள்ள திருமணமான பெண்கள், மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்வதை நான் காண்கிறேன்; அதனை ஏற்க நான் விரும்பவில்லை” என்று மெஹ்தாபு கூறினார்.

இருப்பினும், பருவமழை பெய்யும்போது, தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட திருமணமும் நடக்கும் என்ற அச்சத்துடனேயே, அவர் வாழ்கிறார்.

CATEGORIES
Share This