உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து ரஷ்யாவுடனான போரில், உக்ரைனின் வெற்றித் திட்டம் குறித்து விவாதித்தார். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுனான சந்திப்பின் போது உக்ரைனின் வெற்றித் திட்டத்தை பற்றி விவாதித்தேன். அத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது, எங்களின் நிலைப்பாடுகளின் ஒருங்கிணைப்பு, பார்வைகள், அணுகுமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் படி நாங்கள் பணித்துள்ளோம்.
ரஷ்ய படையெடுப்பின் துவக்கத்தில் இருந்தே அமெரிக்கா உக்ரைனுடன் ஒன்றாக நின்றதை நாங்கள் வெகுவாக பாராட்டுகிறோம். எங்களின் வெற்றியில் உங்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றித் திட்டம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் விவாதித்தது பற்றி வெளியிட்டுள்ள பதிவில், “உக்ரைனின் வெற்றித் திட்டம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டேன். நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து பணியற்றுவது மிகவும் முக்கியம்.
நாம் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். உக்ரைனிய குடும்பங்கள், உக்ரைனிய குழந்தைகளை புதினின் தீமையிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உக்ரைனுடன் அமெரிக்கா துணை நிற்பதற்காக நாங்கள் எங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு குறித்த அமெரிக்க அதிபர் பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “போரில் உக்ரைனின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவது குறித்தும், முன்பை விட உக்ரைனை மேலும் உறுதியாக்குவது குறித்தும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இன்றும் மீண்டும் விவாதித்தேன். இரண்டு விஷயங்கள் உறுதியாக உள்ளன. ஒன்று உக்ரைன் இந்தப் போரில் உறுதியாக வெற்றி பெறும். போரின் பாதையின் ஒவ்வொரு நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உக்ரைனுக்கு புதிதாக ராணுவத் தளவாடங்கள் மற்றும் 8 மில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.