சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? – நாசா இன்று முக்கிய அறிவிப்பு

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? – நாசா இன்று முக்கிய அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த தகவலை நாசா இன்று தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மீடியா டெலி கொன்பரன்ஸை நாசா ஏற்பாடு செய்துள்ளது. இன்று (ஆக.14) இரவு 10.30 மணி அளவில் இது நடைபெற உள்ளது.

கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஸ்டார்லைனர் விண்கலனில் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவது குறித்து நாசா டெலி கான்பரன்ஸ் மூலமாக விளக்கம் தர உள்ளது. இதில் அதுகுறித்த திட்டமிடலை நாசா விளக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன? – ஸ்டார்லைனர் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது தொடர்பான சாத்தியங்கள் குறித்து நாசா மிஷன் மேனேஜர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு அழைத்து வருவது தான் நாசாவின் முதல் இலக்காக உள்ளது. அதே நேரத்தில் மாற்று முயற்சி சார்ந்த ஆப்ஷன்களையும் நாசா பரிசீலித்து வருகிறது. இதனை நாசாவின் கமர்ஷியல் க்ரூ புரோகிராம் மேனஜர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார்.

அந்த மாற்று முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 9 மிஷன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் மாத மத்தியில் இந்த க்ரூ 9 டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல இருந்தது. தற்போது அது செப்டம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் செல்லும் இரண்டு விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரை விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதன் பின்னர் அந்த விண்கலம் பூமிக்கு திரும்புகிறது.

அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போயிங் நிறுவனத்துக்கு ஸ்டார்லைனர் விண்கலனின் பயணம் முக்கிய மைல்கல்லாக இல்லாமல் சோதனையாக மாறி உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை நாசா இன்று அறிவிக்கும். அதன்பிறகே இந்த பயணத்தின் நிறைவு குறித்து அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

CATEGORIES
Share This