உக்ரெய்னுடனான மோதலை நிறுத்த புடின் தயார்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி
ரஷ்யா – உக்ரெய்ன் போர் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரெய்னுடனான போரை நிறுத்திக்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘ரொய்ட்டர்ஸ்’ ஆங்கிலச் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இதுகுறித்து அச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செயதியில் போரை நிறுத்துவதற்கான தேவையை ரசிய ஜனாதிபதி உணர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
உக்ரெய்னுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் தமது தாக்குதல் நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்திக்கொள்வதற்கு புடின் ஒப்புக்கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் தற்சமயம் தாக்குதல்களில் ரஷ்ய படையினர் முன்னேறி வருவது, உக்ரெய்னின் பகுதிகளை கைப்பற்றுவதற்கு அல்ல உக்ரெய்னை பேச்சு வார்த்தைக்க இறங்கிவர சம்மதிக்க வைப்பதற்காகவே எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரெய்னுக்கு இடையில் அமைதிக்காக ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுக்கின்றன. இது அதிருப்தியை அளிப்பதாக புடின் தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
உக்ரெய்னும் ஐரோப்பிய நாடுகளும் யுத்தம் நிறுத்தப்படுவதை விரும்பாத வரையில் இந்த தாக்குதலை தொடரலாம் என்பது புடினின் திட்டமாக உள்ளது. எனினும் போர் நிறுத்த ஒப்பந்தம் புடினின் விருப்பமாகவும் உள்ளது.
மேலும் நேட்டோ உறுப்பு நாடுகளுடன் மோதலில் ஈடுபடவும் நாங்கள் விரும்பவில்லை. காரணம் அது பயங்கரமான ஆயுதப் போராக உருவெடுக்கும். எனவே போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்புவதாக ரொய்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோ சர்வதேச் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“இந்த யுத்தத்தை நிறைவு செய்ய உக்ரெய்னுடன் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. இதனை நாங்கள் நீண்ட காலமாகவே கூறி வருகிறோம். முடிவில்லாமல் தொடரும் இந்த போரை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.