உக்ரேன் அமைச்சரவையில் திடீர் மாற்றம்; வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்

உக்ரேன் அமைச்சரவையில் திடீர் மாற்றம்; வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்

ரஷ்யாவுடன் 30 மாதங்களாக நடைபெறும் போருக்கு இடையே உக்ரேனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா என்பவர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 4ஆம் திகதி) பதவி விலகியுள்ளார்.

ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று செப்டம்பர் 3ஆம் திகதி பதவி விலகிய நிலையில் மேலும் பல அமைச்சர்கள் விலகுவதும் புதியவர்கள் நியமிக்கப்படுவதும் இனிவரும் நாள்களில் இடம்பெறும் என்று ஜனாதிபதி ஸெலன்ஸ்கியின் உதவியாளர் தெரிவித்தார்.

குளிர்காலத்தை எதிர்கொள்ள அரசாங்கம் மாற்றியமைக்கப்படுவதாக அவர் விளக்கினார்.

குலேபாவின் பதவி விலகல் கடிதம் நாடாளுமன்ற நாயகர் ருஸ்லான் ஸ்டெஃபான்சுக் என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் விரைவில் பதவி விலகல்கள் குறித்து விவாதிக்கும் என்று நாடாளுமன்ற நாயகர் கூறினார்.

ரஷ்ய, உக்ரேன் போரின் இக்கட்டான கட்டத்தில் வரவிருக்கும் இந்த அமைச்சரவை மாற்றங்கள் நாட்டை வலுப்படுத்தி எதிர்பார்க்கும் தீர்வுகளை அடைய தேவையானது என்று ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இந்நிலையில், லிவிவ் நகரில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல் மழையில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் மத்திய நகரான போல்டாவில் உள்ள இராணுவப் பயிற்சி நிலையத்தில் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் லிவிவ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This