ரணிலுடன் இணையும் ராஜித?: சஜித்துக்கு இடையூறு இருக்காது எனவும் தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைய தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக “சிலோன் ரூடே“ என்ற ஆங்கில செய்தித்தளம் தெரிவிக்கின்றது.
அது தொடர்பில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து விசேட பிரநிதி ஒருவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுடன் நேற்று (12) இரவு பானந்துர பிரதேசத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் இன்று (13) பிற்கபலில் கொழும்பு கங்காராம விஹாரையில் மத வழிபாடுகளை நிறைவு செய்த பின் அது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு விடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
களுத்துறை மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இருவர்களில் ஒருவராவர்.
முன்னாள் அமைச்சரின் அரசியல் தீர்மானம் ஒருபோதும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தடையாக இருக்காது எனத் தெரிவித்து களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.