இலங்கை முழுவதும் சூறாவளி பிரசாரம்: ரணில், சஜித், அனுர, நாமலின் திட்டம் என்ன?
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நாளை 14ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
திட்டங்களை ஏற்கனவே வகுத்துவிட்டனர்
மற்றுமொரு பிரதான வேட்பாளராக கருதப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச மாத்திரமே இன்னமும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.
இன்று அல்லது நாளை நாமல் ராஜபக்ச தமது கட்டுப்பணத்தை செலுத்த உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இதேவேளை, பிரதான வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்கான திட்டங்களை ஏற்கனவே வகுத்துவிட்டனர்.
நாளை மறுதினம் 15 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்த கையோடு தமது சூறாவளி பிரச்சாரங்களை தொடங்க உள்ளனர். ஒவ்வொரு கட்சியும் குறைந்தபட்சம் 100 பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிடடுள்ளன.
அனல் பறக்கும் பிரசாரங்கள்
நான்கு பிரதான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால் 35 சதவீத வாக்குகளையே முதலாவது இடத்தை பெறும் வேட்பாளர் பெறக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தாம் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குளை பெறுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தெரிவித்து வருகின்றன.
40 சதவீதமாக இருக்கும் மிதக்கும் வாக்காளர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பதென்ற முடிவை எடுக்கவில்லை என்றும் சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்தல் பிரசாரங்கள் இம்முறை அனல் பறக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க தனது முதல் பொதுக் கூட்டத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக இடம்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 100 இற்கும் அதிகமான பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
16 ஆம் திகதி குருணாகலையில்
2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை இலங்கையில் முன்னெடுத்திருந்தார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் கடன் வழங்குநர்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அறிய முடிகிறது.
சஜித் பிரேமதாச, 120 பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். ஆகஸ்ட் 16 ஆம் திகதி குருணாகலையில் தமது முதலாவது பிரசாரக் கூட்டத்தை நடத்த உள்ளார். அதன் பின்னர் தமது தீவிர பிரசாரத்தை அவர் இலங்கைத் தீவு முழுவதும் முன்னெடுக்க உள்ளார்.
சஜித் பிரேமதாசவின் பிரச்சாரத்தில் இம்முறை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
17 ஆம் திகதி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டையில்
பொருளாதாரம் மற்றும் ஊழலை முடிவுக்குக் கொண்டுவரும் தமது வலுவான நிலைப்பாடு உட்பட பல்வேறு விடயங்கள் சஜித் பிரேமதாசவின் பிரசாரத்தில் முக்கியத்துவம் பெறும் எனத் தெரியவருகிறது.
அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் 100 இற்கும் அதிகமான பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் திகதி காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் மூன்று பொதுக் கூட்டங்களின் ஊடாக அனுர தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளார்.
அனுரவின் பிரச்சாரத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வாறு புத்துயிர் கொடுப்பது மற்றும் நாட்டில் நிலவும் ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிகமாக கவனம் செலுத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்த நாமல் ராஜபக்சவும் 100 இற்கும் அதிகமான பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.
வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களில் நாமல் ராஜபக்ச பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, சர்வஜன அதிகாரம் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரமும் நாடு முழுவதும் பல்வேறு பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.