1700 ரூபா விவகாரமும் ஜீவன் – ரணில் – சஜித் வியூகமும்: பலிக்கடாவாகும் தொழிலாளர்கள்
மலையக தொழிலாளர்களின் 1700 ரூபாய் அடிப்படை சம்பளப் பிரச்சினை தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்குள் இடம்பிடித்து விட்டது.
ரணில் மட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விசேடமாக மலையக மக்களை முதன்மைப்படுத்தி வெவ்வேறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
இது அவர்கள் வேறொரு தேர்தல் களத்திற்கு இறங்கவுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 1ஆம் திகதி 1700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக மலையக மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
அவ்வாறு தெரிவித்ததையடுத்து அந்த வாக்குறுதி ஒரு பெரிய பிரச்சாரமாகவே மாறியது. அதனை கொண்டாடும் விதமாக மலையக மக்களினால் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி பலவித கொண்டாட்டங்களும் இடம்பெற்றன.
எனினும், அந்த 1700 ரூபாய் இது வரையில் வழங்கப்படவில்லை. அதனை வழங்காமலிருக்க பலவிதமான உத்திகள் கையாளப்பட்டு வரும் நிலையில், நேற்று (12) மற்றுமொரு வியூகத்தில் அந்த மக்களுக்கு எதிர்ப்பார்ப்புகளை வழங்கி ஏமாற்றியிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொணடமான் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணைந்து உறுதியளித்த நாட்சம்பளமான, 1700 ரூபாயை வழங்குவதற்கு மேலதிகமாக நிபந்தனைகளை விதித்தமை மற்றுமொரு உத்தியாக பேசப்படுகிறது.
இந்நிலையில், சஜித் பிரேமதாச நேற்று மலையக மக்களின் ஜீவனோபாயத்தை கட்டியழுப்பும் நோக்கம் என விளக்கமளித்து சாசனம் ஒன்றிலும் கையெழுத்திட்டார்.
சஜித் பிரேமதாசவுடன் மனோ கணேசன், பழனி தீகாம்பரம், எம். உதய குமார ஆகியோர் அந்த சாசனத்தில் கூட்டாகக் கையெழுத்திட்டனர்.
எவ்வாறாயினும், கடந்த மே தின மேடையில் இருந்தே சஜித் மற்றும் ரணில் இருவரும் இந்த மக்களின் வாக்குகளை தம்பக்கம் ஈர்க்கும் நோக்கில் ஆரம்பித்த போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.