சந்தித்து பேச வருமாறு தமிழ் பொது வேட்பாளர் தரப்புக்கு சஜித்தும் அவசர அழைப்பு

சந்தித்து பேச வருமாறு தமிழ் பொது வேட்பாளர் தரப்புக்கு சஜித்தும் அவசர அழைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் பொதுக் கட்டமைப்பினர் நிறுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவினால் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ் பொதுக் கட்டமைப்பினர் ஏற்க மறுத்துள்ளனர் .

தமிழ் பொதுக்கட்டமைப்பில் உள்ள தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதி ஒருவருக்கு நேற்று திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச,எதிர்வரும் 14 ஆம் திகதி (நாளை ) தமிழ் பொதுக் கட்டமைப்பினரை சந்தித்து பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ் பொது வேட்பாளருக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான பணிகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதனால் அன்றைய தினம் சந்திக்க முடியாத நிலை இருப்பதாக தமிழ் மக்கள் பொதுச் சபையின் அந்தப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்பு மனுத் தாக்கலுக்கு பின்னரான ஒரு திகதியில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் சந்திக்க முடியும் எனவும் அந்தப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, நீங்கள் இன்று (நேற்று திங்கட்கிழமை )ஜனாதிபதியை சந்திக்கின்றீர்கள்தானே என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுள்ளார். இல்லை,எம்முடனான சந்திப்புக்கான சரியான காரணம் கூறப்படாததாலும் கட்டுப்பணம் செலுத்துதல் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதனாலும் தமிழ் பொதுக் கட்டமைப்பினராகிய நாம் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்து விட்டோம்.எம்.பி.க்கள் என்ற அடிப்படையில் சிலர் ஜனாதிபதியை சந்திக்கலாம் என தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் பொதுக் கட்டமைப்பினர் நிறுத்தியுள்ள நிலையில் அவர்களை திங்கட்கிழமை சந்திக்க ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை விடுத்த அழைப்பை தமிழ் பொதுக் கட்டமைப்பினர் நிராகரித்த நிலையிலேயே எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவும் 14 ஆம் திகதி சந்திப்பதற்கான அழைப்பைவிடுத்த நிலையில் அதனையும் தமிழ் பொதுக் கட்டமைப்பினர் ஏற்க மறுத்ததும் தெரிந்ததே.

CATEGORIES
Share This