கோட்டாவை வெளியேற்றிய தரப்பு புதிய கூட்டணியை உருவாக்கியது: ரணிலை விமர்சித்து அடுத்த முயற்சிக்கு ஏற்பாடு
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும நாடாளுமன்ற தேர்தல்களை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி அரசியல் போராட்டக்களத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் குறிப்பாக, கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்குவவதற்கான போராட்டக்களத்தில் இறங்கிய தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன.
இதன் பிரகாரம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர ஆகியோர் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே, ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பு போன்றனவும் இணைந்துள்ளன.
இந்த புதிய அமைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வசந்த முதலிகே, “எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பார்த்தது போன்று மாற்றம் இடம்பெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போதுள்ள முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய அபிவிருத்திகளின் கீழ், நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவில்லை , மக்கள் தமது அன்றாட வாழ்வில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.பொருளாதார அபிவிருத்திக்காக எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திலிருந்து விடுபடுவதற்கு பொருளாதார கலந்துரையடால் இடம்பெற வேண்டும். அந்தவகையில், இலங்கையின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் அமைப்பை அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலிகே மேலும் விளக்கமளித்தார்.