தமிழ்ப் பொது வேட்பாளர் – விக்னேஸ்வரன் சொல்லும் காரணம்: சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்

தமிழ்ப் பொது வேட்பாளர் – விக்னேஸ்வரன் சொல்லும் காரணம்: சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்

இலங்கை மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை தெரிவிக்கும் நோக்கில் , இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதே இந்த ஜனாதிபதித் தேர்தலின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முழுவதுமாக தமிழ் மக்களுக்காக ஒரு வேட்பாளரை முன்வைத்து இத்தனை நாட்களாக தமிழ் மக்களுக்கு காணப்படக்கூடிய பிரச்சினைகளை அந்த வேட்பாளர் மூலம் புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சர்வதேசமும் அவை தொடர்பில் அறிந்துக் கொள்ள வேண்டும். எங்களுக்கான உரிமைகளை நாங்கள் முன்வைக்க தீர்மானித்துள்ளோம். என சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடக்குக் கிழக்கின் 07 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு மூன்று பேரின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பா. அரியநேந்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 07 கூட்டணிக் கட்சிகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உள்ளடக்கப்படவில்லை.

இக் கட்சிகளுடன் சிவில் சமூக அமைப்புகள் பேச்சு நடத்தியிருந்தன. ஆனாலம் இக் கட்சிகள் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்க மறுத்துவிட்டன.

வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் பலமான விருப்பத்தின் பேரில் 07 கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுத் தமிழ் வேட்பாளரை முன்வைப்பது அவசியமற்றது என பல தமிழ் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால் வெற்றி பெற முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பலத்தை காட்ட இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This