பட்டித்திடல் படுகொலை; இதுவரை நீதியும் இல்லை நிவாரணமும் கிடையாது
பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர்.
தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள்.
குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து நடத்தப்பட்ட கண்ணி வெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.