ஜனாதிபதி தேர்தலில் திலகர்: கட்டுப்பணமும் செலுத்தினார்

ஜனாதிபதி தேர்தலில் திலகர்: கட்டுப்பணமும் செலுத்தினார்

சுதந்திர இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டதால் மூன்று தசாப்தகாலமாக பல அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக வாழும், மலையகத் தமிழினத்தினை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக ஆக்குவதற்கு அவசியமான தேசிய கொள்கைத் தீரமானங்களை கொள்கை வகுப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வலியுறுத்தும் விதமாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் களத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் எடுத்துள்ளதாக மலையக அரசியல் அரங்கம் அறிவித்துள்ளது.

அரங்கத்தின் அந்த உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா சுயாதீன வேட்பாளராக பங்கு பெறுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

‘ஜனாதிபதி பதவியை வெல்வதற்காக அல்ல, மலையகத் தமிழ் மக்களுக்காக வெல்ல வேண்டிய பல உரிமைகளை தேசிய தளத்தில் சொல்வதற்காக’ எனும் எண்ணக்கருவை முன்வைத்து ஜனாதிபதி தேர்தல் களத்தில் பங்குகொள்ளும் மயில்வாகனம் திலகராஜா மலையக அரசியல் வரலாற்றிலும் இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளராக களம் இறங்கும் முதலாவது மலையகத் தமிழர் எனும் அடையாளத்தையும் பெறுகிறார்.

2000ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த காலம் முதல் தன்னை முழுமையான இலக்கிய, சமூக, அரசியல் செயற்பாட்டாளராக ஈடுபடுத்திக் கொண்ட திலகர் 2015-2020 காலப்பகுதியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார்.

தனது நான்கரையாண்டு நாடாளுமன்ற உறுப்பினர் காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர் என அங்கீகரிக்கப்பட்டதுடன் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதல் தடவையிலேயே 29வது இடத்திற்கும் முன்னேறி இருந்தார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக பொதுத் தேர்தலில் போட்டியிடாததுடன் கட்சி, கூட்டணியின் சகல பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.

கடந்த மூன்றாண்டு காலமாக ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் சமூக-அரசியல் தளத்தை நிறுவி அடுத்தத் தலைமுறையினருக்கான அரசியல் செல்நெறியை வழிநடாத்தும் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் காட்டப்ட்ட அநீதிக்கு எதிராக தனது முதலாவது ஆண்டில் நாடு தழுவிய அகிம்சா வழி போராட்டத்தை முன்னெடுத்த மலையக அரசியல் அரங்கம் அதில் வெற்றியையும் கண்டது.

தனது இரண்டாவது ஆண்டில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அக்கரப்த்தன, கொட்டகல, நோர்வூட், மஸகெலியா ஆகிய நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களையும் முன்னிறுத்தியது. தனது நாடாளுமன்ற பதவிக் காலத்தில் தான் முன்னின்று திருத்தம் செய்த பிரதேசச் சபை சட்டத்தை புதிதாக உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளில் நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிய போதும் அந்த தேர்தல் நடாத்தப்படாமலே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“மலையகத் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளராக்கு” எனும் தொடர் பிரச்சார இயக்கத்தை தனது மூன்றாவது ஆண்டிலே முன்னெடுத்துவரும் மலையக அரசியல் அரங்கம் அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் களம் இறங்கி மலையகத் தமிழ் மக்களின் வென்றெடுக்கப்பட வேண்டிய பல அரசியல் உரிமைகள் குறித்த தேசிய கொள்கை வகுப்பாளர்களினதும் ஆட்சியாளர்களினதும் கவனத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

CATEGORIES
Share This