பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சி?: 11ஆம் திகதி இறுதி முடிவு

பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சி?: 11ஆம் திகதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவருமான பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 20 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து நீண்டகாலம் கலந்துரையாடிவந்தது.

இதன்பலனா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பா.அரியநேந்திரனை பொது வேட்பாளராக நிறுத்த முடிவுசெய்யப்பட்டு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன், பொது வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 11ஆம் திகதி முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவரை தொடர்ந்து கட்சியில் தங்க வைப்பதற்கே கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் தமிழரசு கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This